வெள்ளி, 13 மார்ச், 2015

தமிழக அரசியல் உருவான வரலாறு – 1

mar (1-15) 2012 - 2.pmd

 மனிதனின் ஒவ்வொரு அசைவிலும் ஏதோ ஒரு அரசியல் சார்பு இருப்பதை யாரும் மறுப்பதற்க்கில்லை. டார்வினின் கோட்பாடுகளின்படி  மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்து இந்த அறிவார்ந்த நிலைக்கு வருவதற்குள் பல்வேறு படிநிலைகளைக் கடந்து வந்திருக்கிறான் என்பது வரலாற்றுச் சான்று.  மனிதனின் இந்த வளர்ச்சிக்கு சமூகம்,  பண்பாடு, கலாச்சாரம், அரசியல், போர்முறை, பொருளாதாரம், சித்தாந்தம் என ஒவ்வொன்றும் அரும் பங்களித்திருத்திருக்கின்றன.


நாடோடிகளாகத் திரிந்த மனிதன் நாகரிக வளர்ச்சியடைந்து ஆற்றங்கரையில் வாழத்தொடங்கிய காலம் என்பது மனித வளர்ச்சிப் பாதையின் முதல்படி எனலாம். இனக்குழுக்களாக வாழத்தொடங்கிய மனிதன்  அனுபவம் வாய்ந்த குழுத் தலைவனின் நெறிப்படி வாழத்தொடங்கினான்.  பண்பார்ந்த ஒரு இனக்குழுத் தலைவனின் அடுத்த வளர்ச்சிப் படிநிலைதான் அரசன் எனும் தலைவன் ஆட்சிமுறை உருவாகியது.

சங்க காலத்தில் மூவேந்தர்களின் ஆட்சியின் கீழ் இருந்த தமிழகம் பொற்கால ஆட்சியைக் கொண்டிருந்ததை ஆய்வாளர்கள் உறுதிபடுத்துகிறார்கள். காரணம் அவர்களுடைய சிறப்பான ஆட்சிமுறை. அதன்பிறகு பிற்கால சோழர்கள் ஆட்சிதான் தமிழகத்தில் ஒரு நிலைத்த ஆட்சியை ஏற்படுத்தியது.     இவை எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம், மக்கள் நலனை முன்படுத்திய அரசாட்சி முறை.

இந்தியாவின் பல நிகழ்வுகளுக்கு தமிழர்களின் நாகரீகம் தான்   முன்னோடி.  அதில் நாம் பெருமையடைவதில் தவறேதுமில்லை. ராஜராஜசோழன் காலத்தில்தான் குடவோலை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது மக்கள் தாங்கள் விரும்பும் பிரதிநிதிகளை அவர்களே வாக்களித்து தேர்ந்தெடுக்கும் இன்றைய ஜனநாயக தேர்தல் முறைக்கு முன்னோடி. இப்படியாக, அரசியலில் மட்டுமின்றி, இன்றைய நாகரீகத்தின் எல்லா துறைகளிலும் தமிழகத்தின் முதல் பதிவு இருக்கும்.

தவிர்க்கமுடியாத காரணியாக நம் வாழ்வோடு ஒன்றியிருக்கும் நம் தமிழக அரசியல் உருவான சூழலைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.   ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு அரசியல் சக்திகள் மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றன. தலைவர்களுடைய பேச்சாற்றல், அவர்களுடைய செயல்பாடுகள் என மக்கள் நம்பிக்கைக்கு காரணமான ஏதோ ஒன்று அவர்களை ஈர்த்திருக்கிறது.

ஊழல் குற்றச்சாட்டு, விலைவாசி உயர்வு, மொழிப் பிரச்சனை, இனப்பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களால், மக்கள்  ஆளும் கட்சிகளை புரட்டிப்போட்ட நிகழ்வுகள் தமிழகத்தில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் பதிந்திருக்கிறது. சமூக மாற்றத்தை மையப்படுத்தி உருவாகிய பல இயக்கங்களும் நம் வரலாற்றில் உண்டு. சில கட்சிகள் வந்த வேகத்தியே மறைந்த  நிகழ்வுகளும்  நம் அரசியல் வரலாற்றில் உண்டு. ராஜாஜி தொடங்கிய சுதந்திரா காங்கிரஸ், ம.பொ.சிவஞானத்தின் தமிழரசுக் கட்சி, ஈ.வெ.கி.சம்பத்தின் தமிழ் தேசியக் கட்சி, எஸ்.டி.சோமசுந்தரத்தின் நமது கழகம், நெடுஞ்செழியன், ராஜாராம் உள்ளிட்டவர்கள் துவக்கிய மக்கள் தி.மு.க. போன்ற  எண்ணற்ற கட்சிகள் தமிழகத்தில் மிக எதிர்பார்ப்போடு துவக்கப்பட்டு பின்னர் காணாமல் போய்விட்டன.


மக்கள் மனநிலையை புரிந்து கொண்ட பல  இயக்கங்கள், அரசியல் கட்சிகளாக அவதாரமெடுத்து சாதனை படைத்திருப்பதும்  நம் வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது. அந்த வகையில் தமிழக அரசியல் உருவான வரலாற்றை அலசும் கட்டுரையாக இந்த தொடர் கட்டுரையை உருவாக்க முற்பட்டுள்ளோம்.


மன்னராட்சி காலத்திற்குப் பிறகு ஆங்கிலேயரின் கட்டுகுள் வந்தது, இந்திய அரசியல். அதை மீட்டெடுக்கும் பொருட்டு விடுதலை போராட்ட உணர்வோடு தொடங்கப்பட்ட இயக்கமே காங்கிரஸ் பேரியக்கமாகும். இந்திய விடுதலையை மையப்படுத்தி மக்கள் போராட்டம் நடத்திய ஆரம்ப காலத்தில், இந்தியா முழுவதும் தனித்தனி அமைப்புகளாக போராடினர். அவர்களை ஒரே மையப்புள்ளியில் ஒருங்கிணைக்க  ஒரு வலிமையான அமைப்பு தேவைப்பட்டது. அப்படி 1885 இல் பிரம்மஞான சபையைச் சேர்ந்த A.O Hume போன்றவர்களால்  உருவானதுதான் காங்கிரஸ் பேரியக்கம். ஆனால் அதன் இன்றைய செயல்பாடுகளால் மக்கள் மத்தியில் வரவேற்பை இழந்தது.

தென்னிந்திய நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என அதன் நீட்சி இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதேபோல் இந்திய விடுதலையை எதிர்நோக்கி தொடங்கப்பட்ட  பேராயக்கட்சியான  இந்திய தேசியக் காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகளும் தற்போது பொதுநல நோக்கத்தை மறந்து சுயநல நோக்கத்திற்காக செயல்பட்டு வருவதையும் மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் வருகிறார்கள்.


நீதிக்கட்சி:
காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பாகவும் மாற்றாகவும் நவம்பர் 1916-ல் சென்னையில் உருவானதுதான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation). இச்சங்கம் நீதிக்கட்சி (Justice Party) என்ற பெயரில்தான் பொதுமக்களால் அறியப்பட்டது
இந்தக் கட்சியை ஆரம்பித்தவர்களின் முக்கிய நோக்கம் சமூகத்தில் பின்தங்கியோர் முன்னேற வேண்டும் என்பதுதான்.   அந்த காலகட்டத்தில் மெட்ராஸ் பிரசிடென்சியின் (தமிழகம், ஆந்திரா, கர்நாடகத்தில் சில பகுதிகள், கேரளத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய பகுதி) மக்கள் தொகை 4.75 கோடியாகவும், அதில் சமூக மேல்தட்டு மக்களின் எண்ணிக்கை வெறும் 75 லட்சமாகவும் இருந்தது. ஆனால் 1892 முதல் 1904 வரை மாகாண சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 16 பேரில் 15 பேர் உயர் சாதி வகுப்பினர். அதேபோல் உதவிப் பொறியாளர் தேர்வில் 21 பேரில் 17 பேர் மேட்டுக்குடியினர். அப்பொழுது பதவியில் இருந்த உதவி கலெக்டர்களில் 140 பேரில் 77 பேர் மேல்தட்டைச் சார்ந்தோர். அப்படியே நீதித்துறையில், 1913-ல் ஜில்லா முன்சீப்களின் 128 பேரில்  93 பேர்.  1915-ல் சென்னை மாகாணத்தில் கல்வி கற்றோர் தொகை 8%. ஆனால் உயர் வர்க்கத்தினரில் கல்வி கற்றோர் சதவிகிதம் 75. அதுவரையில் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற 650 பேரில் 452 பேர் மேல்சாதி மக்கள். 1916-ல் மாகாண அரசுப்பணியில் 129 பேரில் 100 பேர் பிராமணர். அதேபோல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மாகாணப் பிரதிநிதிகளில் 16-ல் 15 பேர் இவர்களே.

முதலாம் உலகப்போர் நேரம். அப்பொழுதுதான் காந்தி இனவெறியின் பிடியில் சிக்கியிருந்த தென்னாப்பிரிக்காவிலிருந்து, காலனி ஆதிக்கத்தில் இருந்த  இந்தியாவிற்கு வந்திருந்தார். காங்கிரஸ் தலைவராக இருந்த அன்னி பெசண்ட் 1915-ல் ஹோம் ரூல் இயக்கம் என்றொரு இயக்கத்தைக் கொண்டுவந்தார். கிளர்ச்சியின் மூலம் இந்தியாவுக்கு அதிகப்படியான அதிகாரத்தைப் பெறுதலே அந்த இயக்கத்தின் நோக்கம். ஐரோப்பாவில் போர் நடந்துகொண்டிருப்பதால் இந்தியா மீது அதிக நேரத்தைச் செலுத்த முடியாது என்பதால், பிரிட்டன் ஒருவேளை ஹோம் ரூல் எனப்படும் குறைந்த சுயாட்சியை வழங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பு சில மூத்த காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்தது.

ஆனால் 1916 இல்,  இந்தியாக்கு சுதந்திரம் கிடைத்தால் அதனால் தென்னிந்தியாவில் மேல்சாதியினரின் ஆதிக்கம்தான் இருக்கும் என்று பல தலைவர்கள் நினைத்தனர். ஆங்கிலேயர் ஆட்சி போய் பார்ப்பனர் ஆட்சி வரும் என்று நீதிக்கட்சித் தலைவர்களுக்குத்  தோன்றியது. அதனால் ஹோம் ரூல் இயக்கத்தை எதிர்ப்பது என்றும், பார்ப்பனரல்லாதோர் நலனுக்காக கட்சி ஒன்றை உருவாக்குவது, சில பத்திரிகைகளை உருவாக்குவது என்றும் தீர்மானி த்தனர். அதன் விளைவாக உருவானதே இந்த நீதிக்கட்சி. ஆங்கிலேயர் ஆட்சி தொடரவேண்டும் என்றும் அதன் தொடர்ச்சியில் பல சமூகத்தவரும் கல்வியில் முன்னேறி சகலவிதமான வாய்ப்புகளும் அனைவருக்கும் சமமாக கிடைக்கும்போது சுயாட்சி கிடைத்தால், நாட்டில் சம நீதி இருக்கும் என்றும் நீதிக்கட்சியினர் நினைத்தனர். தமது கொள்கைகளை விளக்க நீதிக்கட்சியினர் ‘Justice’ என்ற ஆங்கிலத் தினசரி, ‘திராவிடன்’ என்ற தமிழ்த் தினசரி, ‘ஆந்திரப் பிரகாசினி’ என்ற தெலுங்குத் தினசரி ஆகியவற்றை தொடங்கினார்கள்.
Justice_Party_1920s
Justice_August_30_1937

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக