ஞாயிறு, 15 மார்ச், 2015

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ஆதரித்தது ஏன்?- ஜெயலலிதா முழுமையான விளக்கம்

நாடாளுமன்றத்தில் நிலம் கையக்கப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அதிமுக ஆதரவு வழங்கியதற்கான காரணங்கள் குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு நடைமுறையில் இருந்த நில எடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக, 'நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' என்னும் சட்ட முன்வடிவினை 2013 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து அதனை சட்டமாக்கியது. இந்தச் சட்டம் 1.1.2014 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த சட்டத்தில் சில திருத்தங்களை மத்திய பாரதிய ஜனதா அரசு அவசர சட்டம் மூலம் கடந்த 31.12.2014 அன்று கொண்டு வந்தது. அந்த அவசர சட்டத்தை சட்டமாக்கும் வகையில் தற்போது உள்ள 'நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும்

ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் 9.3.2015 அன்று அறிமுகம் செய்தது.

அதன் மீது எதிர்க்கட்சிகள் தெரிவித்த கவலைகளின் அடிப்படையில் மத்திய பாரதிய ஜனதா அரசு மேலும் 9 திருத்தங்களை 10.3.2015 அன்று தாக்கல் செய்தது. நில எடுப்பு தொடர்பாக இந்த சட்ட திருத்தத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்காக நில எடுப்புச் சட்டத்திலிருந்து சில விலக்குகள் அளிக்கப்படக் கூடாது என்பது அஇஅதிமுகவின் முடிவு ஆகும். அதன் அடிப்படையில், இந்த சட்ட திருத்தத்தில் ஒரு திருத்தத்தை எனது உத்தரவின் பேரில் அஇஅதிமுக முன்மொழிந்தது.

இதனை ஏற்றுக் கொண்ட மத்திய பாரதிய ஜனதா அரசு ஏற்கெனவே தாக்கல் செய்த சட்டதிருத்தத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ மனைகளுக்கென இருந்த சலுகைகளை விலக்கிக் கொண்டு விட்டது. எனவே, எனது உத்தரவின் பேரில் 2013 ஆம் ஆண்டைய 'நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' சட்ட திருத்த மசோதாவிற்கு மக்களவையில் அஇஅதிமுக ஆதரவளித்து வாக்களித்தது.

'நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' சட்டத்தில் இந்த திருத்தங்களுக்கு எதிர்கட்சியினர் தங்களது எதிர்ப்பை இப்போதும் தெரிவித்துள்ளனர். இந்த சட்டமுன்வடிவுக்கு அஇஅதிமுக ஆதரவளித்தது தவறு என்றும் இது பெரும் பண முதலாளிகளுக்கும் தொழில் அதிபர்களுக்கும் சாதகமான சட்டதிருத்தங்கள் தான் என்றும் அஇஅதிமுகவின் மீது வீண் பழி சுமத்த முற்பட்டுள்ளனர்.

கருணாநிதிக்கு பதில்...

திமுக தலைவர் கருணாநிதி, "இந்த சட்டத் திருத்தங்களை முதலில் தீவிரமாக எதிர்த்த அ.தி.மு.க. என்ன காரணத்தினாலோ (?) ஏதோவொரு உள்நோக்கத்தோடு திடீரென்று ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளது" என வேண்டுமென்றே அஇஅதிமுகவை குற்றம் சாட்டும் விதமாக தமது கருத்தை தெரிவித்துள்ளார்.

என்னைப் பொறுத்தவரை, அஇஅதிமுகவைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டிற்கு, தமிழக மக்களுக்கு எவை நன்மை பயக்கக் கூடியதோ அவற்றை மட்டுமே ஆதரிப்பது என்பதும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரானவைகளை எதிர்ப்பது என்பதும் தான் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வரும் கொள்கையாகும். அந்த அடிப்படையிலேயே இந்த சட்ட திருத்தத்தையும் அஇஅதிமுக ஆதரித்தது என்பதை முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

'நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' சட்டம் 2013 ஆம் ஆண்டு முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்டபோது அந்த சட்டம் மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுவதாகவும், பறிப்பதாகவும் அஇஅதிமுக தனது எதிர்ப்பை நாடாளுமன்றத்திலேயே பதிவு செய்துள்ளது. 'நிலம்' என்பது மாநில பட்டியலில் வரும் பொருள் என்பதால் நிலம் சம்பந்தப்பட்ட எதுவும் மாநில அரசால் தான் முடிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 7-ம் இணைப்புப் பட்டியலில், பட்டியல் II-மாநிலத்து பட்டியலில் 18-வது இனமாக "நிலம்" என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, நிலம் தொடர்பான எதுவும் உண்மையில் மாநில அரசு சம்பந்தப்பட்டது தான். ஆனால், பட்டியல் III – ஒருங்கியல் பட்டியலில் 'சொத்தினை கையகப்படுத்தலும், வேண்டுறுத்திப் பெறுதலும்' என்ற பொருண்மை ஒருங்கியல் பட்டியலில் சேர்க்கப்பட்டு அதன் காரணமாக நில எடுப்பு தொடர்பான சட்டம் இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கும் இருக்கிறது என்கிற அடிப்படையில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு 'நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' சட்டத்தை இயற்றியது.

ஏற்கெனவே நடைமுறையில் இருந்த நில எடுப்புச் சட்டத்தினை மாத்திரம் விலக்கிக் கொண்டு புதிய நில எடுப்புச் சட்டத்தை அந்தந்த மாநில அரசுகளே மேற்கொள்ளலாம் என்று தான் மத்திய அரசு முடிவு எடுத்திருக்க வேண்டும். முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் பெரும்பாலான முடிவுகள் அமைச்சரவையாலோ, காங்கிரஸ் கட்சியாலோ எடுக்கப் பெறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. காங்கிரஸ் கட்சியின் தலைவரை, தலைவராகக் கொண்ட ஒரு பெரும் அதிகாரமிக்க National Advisory Committee என்ற அமைப்பின் ஆலோசனையின் பேரிலேயே இத்தகைய ஒரு சட்டத்தை முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு இயற்றி விட்டது. நுனிப் புல் மேய்பவர்களுக்கும், மேம்போக்காக இந்த சட்டத்தை படிப்பவர்களுக்கும் மட்டுமே இந்த சட்டம் கட்டாய நில எடுப்பிலிருந்து விவசாயிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதாக தோன்றும். ஆனால், விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தச் சட்டத்தில் உள்ளவற்றை, ஒரு கையால் கொடுப்பதை மறு கையால் பறிப்பதைப் போல நான்காம் அட்டவணை மூலம் இந்த சட்டமே பறித்து விட்டது என்பது தான் உண்மை.

எனவே தான் 'நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' சட்டம் விவசாயிகளுக்கு சாதகமாக இருப்பதாகச் சொல்வது 'அத்திப் பழத்தை பிட்டுப் பார்த்தால் அத்தனையும் புழு' என்ற பழமொழியைத் தான் நினைவுப்படுத்துகிறது.

'நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' சட்டத்தின் பிரிவு 105 (1)-ன் படி, அந்தப் பிரிவின் உட்பிரிவு 3-க்கு உட்பட்டு நில எடுப்பைப் பொறுத்தவரை 4-வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள சட்டங்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களை நீக்கவோ அல்லது புதிய சட்டங்களை சேர்ப்பதற்கோ மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த ஒரு வருட காலத்திற்குள், அட்டவணை 4-ல் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களுக்கு இந்த சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இழப்பீடு மற்றும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய நில எடுப்பு சட்டம் 1.1.2014 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படியான இழப்பீடு மற்றும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு ஆகியவை 1.1.2015 முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசால் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மத்திய காங்கிரஸ் அரசும் அதற்கு துணை நின்ற இதர அரசியல் கட்சிகளும் 13 மத்திய சட்டங்களுக்கு இந்தப் புதிய நில எடுப்புச் சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளித்தது ஏன்?

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம், 13 மத்திய சட்டங்களுக்கு பொருந்தாது என்றும், அந்த 13 சட்டங்களின் படி நில எடுப்பு செய்யும் போது, இந்த சட்டத்தின் படியான இழப்பீடு மற்றும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு மட்டுமே பொருந்தும் என்றும் மற்ற ஷரத்துகள் பொருந்தாது என்றும், ஆனால் மாநில அரசுகள் மாநிலத்தின் தேவைக்காக நில எடுப்பு செய்யும் போது மட்டும் இந்த சட்டப் பிரிவுகள் முழுவதுமாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது விவசாயிகளின் நன்மையைக் கருதியா? அல்லது மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிப்பதற்கா? என்பது தமிழக மக்களுக்கு நன்கு புரியும்.

எதிர்ப்பு தெரிவித்தது ஏன்?
விவசாயிகளின் நன்மைக்காக மட்டுமே 2013 ஆம் ஆண்டைய புதிய நில எடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது என்றால் 13 மத்திய அரசு சட்டங்களின் கீழ் நில எடுப்பு செய்யும் போது அவற்றை ஏன் கடைபிடிக்கக் கூடாது? இந்த சட்டங்களின் கீழ் நில எடுப்பு செய்யும் போது மட்டும் விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்களா? இதன் காரணமாகத் தான் 2013 ஆம் ஆண்டு புதிய நில எடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது, அஇஅதிமுகவின் சார்பில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பேசிய உறுப்பினர்கள் இந்த சட்டத்தின் அட்டவணை 4ல் உள்ள 13 மத்திய நில எடுப்புச் சட்டங்களுக்கு இந்த 'நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளனர்.

நான்காவது இணைப்பில் வைக்கப்பட்டுள்ள ஒரு சட்டம் தான் The Petroleum and Minerals Pipelines (Acquisition of Right of User in Land) Act, 1962. இந்த சட்டத்தின் கீழ் தான் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் கெயில் நிறுவனத்தால் விவசாயிகளின் நிலங்களின் ஊடே 310 கிலோ மீட்டர் எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் பதிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய அரசின் சட்டத்தின் படி குழாய் பதிக்க வழிவகை செய்யப்பட்டிருந்தாலும், இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் விவசாய நிலங்களின் ஊடே குழாய்கள் பதிக்கப்படக் கூடாது என நான் உத்தரவிட்டேன்.

தேசிய நெடுஞ்சாலை ஓரமாக குழாய் பதிக்கப்படலாம் என்ற எனது அறிவுரையின் அடிப்படையில் தமிழக அரசு அவ்வாறு உத்தரவிட்டது. அதனை எதிர்த்து கெயில் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்து, தங்களுக்கு சாதகமான உத்தரவை பெற்றது. அதன் பேரில், என்னுடைய உத்தரவின்படி, தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு, உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடையாணை பெறப்பட்டது. தற்போது இந்த மனுவை உச்சநீதிமன்றம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

தற்போதும் 2013-ஆம் ஆண்டைய புதிய நில எடுப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் கெயில் நிறுவனம் குழாய் பதித்திட இயலும். அவ்வாறு வழிவகை செய்யும் இந்த The Petroleum and Minerals Pipelines (Acquisition of Right of User in Land) Act, 1962 சட்டத்திற்கு 2013 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய நில எடுப்புச் சட்டத்திலிருந்து முழு விலக்கு அளிக்க அந்த சட்டத்திலேயே வழிவகை செய்யப்பட்டுள்ளது. அப்படியெனில் அந்த சட்டம் விவசாயிகளைப் பாதுகாக்கின்ற சட்டம் என்றும், தற்போதைய சட்ட திருத்தங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறுவதும் மக்களை ஏமாற்றும் செயல் அன்றி வேறு என்ன? அரசியல் ஆதாயத்திற்காக அந்த சட்டத்தை அப்போது ஆதரித்து, தற்போது எதிர்ப்பவர்கள் இதை விளக்க வேண்டும்.

மசோதாவில் திருத்தங்கள்...

நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நாட்டின் வளர்ச்சியில், மாநில அரசுகளும், மத்திய அரசும் பங்குதாரர்களாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், மாநில அரசுக்கு, அதற்குரிய அதிகாரங்களை வழங்கிட வேண்டும் என்ற அடிப்படையிலும் இந்த சட்ட திருத்தங்களை கொண்டு வந்துள்ளதாகவே நான் கருதுகிறேன்.

2013 ஆம் ஆண்டைய 'நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' சட்டத்தில் அத்தியாயம் III-A புதிதாக சேர்க்கப்பட்டு அதன்படி அத்தியாயம் II-ல் உள்ள சமூக தாக்கத்தை தீர்மானித்தல் மற்றும் பொதுநலன் மற்றும் IIIவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்பு கூறுகள் ஆகியவற்றிலிருந்து தேசிய பாதுகாப்பு, ஊரக உள்கட்டமைப்பு, கட்டுப்படியாகக் கூடிய வீட்டுவசதி, ஏழைகளுக்கான வீட்டுவசதி, தொழில் வளாக வழி மற்றும் உள்கட்டமைப்பு, அரசிடமே நிலம் உடமையாக இருக்கும் பட்சத்தில், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதி திட்டங்கள் ஆகிய 5 வகை திட்டங்களுக்கு அத்தியாயம் II மற்றும் III ன் கீழ் விதிவிலக்கு அளிக்க சம்பந்தப்பட்ட அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த மசோதா மக்களவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதாவது ஊரக உள்கட்டமைப்பு போன்ற திட்டங்களுக்கு அத்தியாயம் II-ல் குறிப்பிடப்பட்டுள்ள சமூக தாக்கத்தை தீர்மானித்தல் மற்றும் பொதுநலன் மற்றும் IIIவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்பு கூறுகள் ஆகியவற்றிலிருந்து பொதுவான விலக்கு எதுவும் அளிக்கப்படவில்லை. ஒவ்வொரு திட்டத்தையும் ஆராய்ந்து குறிப்பிட்ட எந்த ஒரு திட்டத்திற்கும் விலக்கு அளிக்க வேண்டுமெனில் அந்த திட்டத்திற்கு விலக்கு அளிப்பதற்கான அதிகாரம் மட்டுமே சம்பந்தப்பட்ட மத்திய அரசு அல்லது மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த திருத்த மசோதா மாநிலங்களுக்குத் தேவையான அதிக அதிகாரத்தை வழங்குகிறதே அல்லாமல், சமூகத் தாக்கத்தை தீர்மானித்தல் மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றிலிருந்து ஒட்டுமொத்தமாக விலக்கு அளித்து 2013 ஆம் ஆண்டைய சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்யவில்லை.

குறிப்பிடப்பட்ட 5 வகை நில எடுப்புக்கும் இந்த இரு அத்தியாயங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டுமா என்பதை சம்பந்தப்பட்ட மாநில அரசே முடிவு செய்யலாம் என்னும் போது அந்தந்த திட்டங்களுக்கு ஏற்ப, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு முடிவு செய்ய இயலும்.

என்னைப் பொறுத்த வரையில் விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் அனுமதி அளிப்பதை அஇஅதிமுக ஒரு போதும் அனுமதிக்காது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். அந்த அடிப்படையில் தான் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்து சட்டம் இயற்றிய போதும் அதனை செயல்படுத்துவதற்கான அதிகாரம் மாநில அரசுக்குத் தான் இருக்கிறது என்பதால் அதனை தமிழ்நாட்டில் தடுத்து நிறுத்துவோம் என உறுதிபட தெரிவித்து, அதன்படியே இது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதே போன்று, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் பரிசோதனையை மத்திய அரசு அனுமதித்தாலும், மாநிலத்தில் அதற்கான அனுமதியை வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது. அந்த அடிப்படையிலே தான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மூலம் செய்யப்படும் ஆராய்ச்சி தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்ற திடமான முடிவை நான் எடுத்து இன்றும் அது தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

'நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' சட்டத்தில் திருத்தங்களை மத்திய அரசு மக்களைவையில் தாக்கல் செய்தது பற்றி திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசின் இந்த திருத்தச் சட்டம் விவசாயிகளுக்கு எதிராகவும், தொழிலதிபர்களுக்கும், பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவானது என்றும், சொந்த நிலத்தின் மீது விவசாயிகளுக்குள்ள அடிப்படை உரிமையை இந்தச் சட்டம் எடுத்து விடுவதாகவும் 26.2.2015 அன்று கேள்வி பதில் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில்...

தொழில் நிறுவனங்களுக்காக நில எடுப்பு பற்றி கருத்து தெரிவிப்பதற்கு கருணாநிதிக்கு எந்தவித அருகதையும் இல்லை. ஏனெனில், 'தமிழ்நாடு தொழிலியல் துறைக்கான நோக்கங்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்துதல் சட்டம்' என்ற சட்டமுன்வடிவு 1997 ஆம் ஆண்டு சட்டமன்றத்திலே அறிமுகம் செய்யப்பட்டு, அது 1999 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. இதனை சட்டமாக்கியது அன்றைய திமுக அரசு தான். இந்த சட்டம், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் வழிமுறைகளைக் குறைத்து விரைவான முறையில் நிலத்தை கையகப்படுத்தும் பொருட்டு இயற்றப்பட்டதாகும்.

எனவே தான் அந்த சட்டமுன்வடிவில் நோக்க காரண விளக்க உரையில், 'இம்மாநிலத்தில் தொழில் நோக்கங்களுக்காக நிலங்களை விரைவான முறையில் கையகப்படுத்தும் பொருட்டு தேவையான சட்டம் இயற்றப்படுவதன் வாயிலாக இந்நேர்வில் தனி வகைமுறைகள் செய்ய வேண்டுமென அரசு முடிவு செய்துள்ளது. இச்சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகின்றது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சட்ட முன்வடிவை நிறைவேற்றக் கோரி அன்றைய வருவாய் துறை அமைச்சர் நாஞ்சில் கி.மனோகரன் சட்டமன்றத்தில் கூறியுள்ளதாவது:

"மைய அரசுத் சட்டத்தில் நிலம் தேவைப்படுகிறது என்று அறிக்கை வெளியிட்ட பின், நில உரிமையாளர்கள் அல்லது அந்த நிலத்தின் மீது அக்கறை கொண்டவர் இசைவு அல்லது மறுப்பு பெறப்படுகிறது. அதற்குப் பிறகு முறையான தொடர் நடவடிக்கை மேற்கொண்டு, சட்டத்தின் 6-வது பிரிவின் கீழ் இறுதி அறிக்கை வெளியிடப்பட வேண்டும். ஆனால் தற்போதைய சட்டத்தின் கீழ் நில உரிமையாளர் முதலிலேயே தொடர்பு கொள்ளப்பட்டு, அதன் பின்னர் அறிக்கை வெளியிடப்படுகிறது. நில உரிமையாளர் தெரிவிக்கும் கருத்துக்களைப் பரிசீலனை செய்தவுடன் ஆணை பிறப்பிக்க இயலும்.

இவ்வாறு அரசிதழில் வெளியிடப்பட்ட நாள் முதல் மேற்பட்ட நிலம் அரசின் வசம் அமையப் பெறும். அவ்வாறு அரசு ஆணையிட்டவாறு நிலத்தை ஒப்படைக்க நில உரிமையாளர் மறுத்தால், தேவைப்படும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்நிலத்தை மாவட்ட ஆட்சியர் தன் வசம் எடுத்துக்கொள்ளலாம். இதன் காரணமாக ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே நிலத்தைக் கையகப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது"

"...இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வது அல்லது நிலத்தில் நுழைவது போன்ற செயல்களிலே ஈடுபடும் அரசு அலுவலரை எவரேனும் தடுத்தால், அவருக்கு 6 மாதம் சிறைத் தண்டனையோ ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமே விதிக்க இச்சட்டத்தில் வழி வகுக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள பொருள் குறித்து அரசோ, மாவட்ட ஆட்சியரோ தீர்மானிப்பதற்கு எதிராக முடிவெடுக்க உரிமையியல் நீதிமன்றங்களுக்கு அதிகார வரம்பில்லை. அதன் மீது தடைகள் வழங்க அந்த நீதிமன்றங்களால் இயலாது. இச்சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மற்றொரு புதிய வழிவகைகளில் இதுவும் ஒன்று...."

".... தொழிற்சாலைகளின் பயன்களுக்காகவே தேவைப்படும் நிலங்கள் இந்தச் சட்டத்தின் வகை முறைகளுக்குட்பட்டு மட்டுமே இனி கையகப்படுத்த இயலும்...." என்றெல்லாம் தெரிவித்தார்.

தொழிற்சாலைகளுக்காக, நடைமுறையில் இருந்த நில எடுப்புச் சட்டக் கூறுகளை எளிமைப்படுத்தி, ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்த திமுகவும், அதன் தலைவர் கருணாநிதியும் தற்போதைய சட்ட திருத்தத்தை குறை கூறுவது வேடிக்கையாக உள்ளது.

2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் தமிழ்நாடு தொழிலியல் துறைக்கான நோக்கங்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் தொழிலகங்களுக்காக சுமார் 11,400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளன. முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் சாமானிய மக்களின் நிலம் எவ்வாறெல்லாம்

அபகரிக்கப்பட்டது என்பதும், அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் நிறுவனங்கள், வீட்டுமனை மேம்படுத்துவோர் ஆகியோர் விவசாயிகளிடமிருந்து விவசாய நிலங்களை தட்டி பறிப்பதற்கு எவ்வாறெல்லாம் துணைபுரிந்தனர் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். முந்தைய மைனாரிட்டி திமுக அரசின் ஆட்சிக் காலத்தில் 2006 முதல் 2011 வரை சுமார் 16,000 ஏக்கர் விளை நிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளுக்காகவும், இதர பயன்பாட்டிற்காகவும் மாற்றம் செய்துள்ளனர்.

முந்தைய மைனாரிட்டி திமுக அரசு நில எடுப்பு சட்ட விதிகள் எதையும் பின்பற்றாமலேயே விவசாயிகளிடமிருந்து நிலத்தை எடுத்துக் கொண்ட நிகழ்வுகளும் உண்டு. தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்கு எந்த சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல் முந்தைய மைனாரிட்டி திமுக அரசு நிலத்தை எடுத்துவிட்டது. இந்த திட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் நிலைகளுக்கான 190 ஏக்கர் நிலங்களை சட்டப்படி கையகப்படுத்தி அதற்கான இழப்பீட்டுத் தொகையையும் வழங்கியது எனது தலைமையிலான அஇஅதிமுக அரசு தான்.

ஜனநாயகம் என்பது மிக அதிகமானவர்களுக்கு மிக அதிக நன்மையை பயக்கும் அமைப்பாகும். எனவே, பொதுநலத்திற்கென நிலத்தை கையகப்படுத்துவது ஜனநாயகத்தில் தவிர்க்க முடியாததாகும். அவ்வாறு நிலங்கள் உரிய அதிகார அமைப்பாலேயே கையகப்படுத்தப்படுகிறதா என்பதும் அவ்வாறு நிலங்கள் கையகப்படுத்தும் போது அதற்குரிய இழப்பீடு வழங்கப்பட்டு நிலத்தை இழந்தவர்களுக்கு மறு வாழ்வும், மறு குடியமர்வும் கிடைக்கிறதா என்பதும் நில எடுப்பின் காரணமாக பொதுநலன் காக்கப்படுகிறதா என்பதும் தான் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும்.

மசோதாவை ஆதரித்தது ஏன்?
இந்த அடிப்படையிலே தான் தற்போது மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 'நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறுவாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' சட்டத்திற்கான திருத்தம்,

குறிப்பிட்ட சில நில எடுப்பு நிகழ்வுகளில் அத்தியாயம் II-ல் குறிப்பிடப்பட்டுள்ள சமூக தாக்கத்தை தீர்மானித்தல் மற்றும் பொதுநலன் மற்றும் IIIவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்பு கூறுகள் ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிப்பதற்கான அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவதாலும், தொழில் வளாக வழிக்கு தேவையான நில எடுப்பு, குறிப்பிடப்பட்ட இருப்புப் பாதை மற்றும் சாலையில் இருமருங்கும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் மட்டுமே எடுக்கப்படவேண்டும் என்றும், இந்த குறிப்பிடப்பட்ட திட்டங்களுக்கு குறைந்தபட்ச நிலமே எடுக்கப்பட வேண்டும் என்றும், பயிர் செய்யப்படாத நிலங்கள் ஆகியவற்றை அளவு செய்து அவற்றின் விவரங்களை தொகுத்து வைத்திருத்தல் வேண்டும் என்றும், நில எடுப்பால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளையெல்லாம் சேர்க்கப்பட்டிருப்பதாலும், தனியார் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இந்த விதிமுறைகளின்படி நிலம் கையகப்படுத்த வழி வகை செய்தது விலக்கிக் கொள்ளப்பட்டதாலும், இந்த சட்ட திருத்த மசோதா பொது நலனுக்காகவே என்பதால் தான், இதனை அஇஅதிமுக மக்களவையில் ஆதரித்தது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவு அளித்து நாடாளுமன்றத்தில் திமுகவை வாக்களிக்கச் செய்தவர் கருணாநிதி. தமிழக நலனுக்கு எதிரான உணவு பாதுகாப்புச் சட்டத்திற்கு ஆதரவு அளித்தவர் கருணாநிதி. தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் 'மீத்தேன் எரிவாயு' திட்டத்திற்கு அனுமதி அளித்தவர் கருணாநிதி.

விவசாயிகள் பயன்படுத்தும் உரங்களின் விலை உயர்வுக்கு வழி வகுக்கும் ஊட்டச் சத்து அடிப்படையிலான உரமானியக் கொள்கைக்கு ஆதரவு அளித்தவர் கருணாநிதி. டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே மாதந்தோறும் உயர்த்திக் கொள்ளலாம் என்ற முந்தைய காங்கிரஸ் அரசின் கொள்கை முடிவுக்கு வழிவகுத்தவர் கருணாநிதி. பன் மாநில தண்ணீர் பிரச்சனையில் தமிழகத்தை வஞ்சித்தவர் கருணாநிதி.

எந்த பிரச்சனையிலும், சொந்த காரணங்களுக்காகவே, தன்னலம் ஒன்றையே கருதி முடிவெடுக்கும் கருணாநிதிக்கு மற்றவர்களும் அவ்வாறே முடிவெடுப்பார்கள் என்று தான் நினைக்கத் தோன்றும். தமிழகத்தின் நன்மைக்காக, தமிழக மக்களின் நன்மைக்காகவே, அல்லும் பகலும் அயராது பாடுபடும் அஇஅதிமுக, தமிழகத்தின் நன்மைக்காகவே நில எடுப்பு திருத்த மசோதாவை மக்களவையில் ஆதரித்தது என்பதை இப்போதாவது கருணாநிதி புரிந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

வெள்ளி, 13 மார்ச், 2015

தமிழக அரசியல் உருவான வரலாறு – 1

mar (1-15) 2012 - 2.pmd

 மனிதனின் ஒவ்வொரு அசைவிலும் ஏதோ ஒரு அரசியல் சார்பு இருப்பதை யாரும் மறுப்பதற்க்கில்லை. டார்வினின் கோட்பாடுகளின்படி  மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்து இந்த அறிவார்ந்த நிலைக்கு வருவதற்குள் பல்வேறு படிநிலைகளைக் கடந்து வந்திருக்கிறான் என்பது வரலாற்றுச் சான்று.  மனிதனின் இந்த வளர்ச்சிக்கு சமூகம்,  பண்பாடு, கலாச்சாரம், அரசியல், போர்முறை, பொருளாதாரம், சித்தாந்தம் என ஒவ்வொன்றும் அரும் பங்களித்திருத்திருக்கின்றன.


நாடோடிகளாகத் திரிந்த மனிதன் நாகரிக வளர்ச்சியடைந்து ஆற்றங்கரையில் வாழத்தொடங்கிய காலம் என்பது மனித வளர்ச்சிப் பாதையின் முதல்படி எனலாம். இனக்குழுக்களாக வாழத்தொடங்கிய மனிதன்  அனுபவம் வாய்ந்த குழுத் தலைவனின் நெறிப்படி வாழத்தொடங்கினான்.  பண்பார்ந்த ஒரு இனக்குழுத் தலைவனின் அடுத்த வளர்ச்சிப் படிநிலைதான் அரசன் எனும் தலைவன் ஆட்சிமுறை உருவாகியது.

சங்க காலத்தில் மூவேந்தர்களின் ஆட்சியின் கீழ் இருந்த தமிழகம் பொற்கால ஆட்சியைக் கொண்டிருந்ததை ஆய்வாளர்கள் உறுதிபடுத்துகிறார்கள். காரணம் அவர்களுடைய சிறப்பான ஆட்சிமுறை. அதன்பிறகு பிற்கால சோழர்கள் ஆட்சிதான் தமிழகத்தில் ஒரு நிலைத்த ஆட்சியை ஏற்படுத்தியது.     இவை எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம், மக்கள் நலனை முன்படுத்திய அரசாட்சி முறை.

இந்தியாவின் பல நிகழ்வுகளுக்கு தமிழர்களின் நாகரீகம் தான்   முன்னோடி.  அதில் நாம் பெருமையடைவதில் தவறேதுமில்லை. ராஜராஜசோழன் காலத்தில்தான் குடவோலை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது மக்கள் தாங்கள் விரும்பும் பிரதிநிதிகளை அவர்களே வாக்களித்து தேர்ந்தெடுக்கும் இன்றைய ஜனநாயக தேர்தல் முறைக்கு முன்னோடி. இப்படியாக, அரசியலில் மட்டுமின்றி, இன்றைய நாகரீகத்தின் எல்லா துறைகளிலும் தமிழகத்தின் முதல் பதிவு இருக்கும்.

தவிர்க்கமுடியாத காரணியாக நம் வாழ்வோடு ஒன்றியிருக்கும் நம் தமிழக அரசியல் உருவான சூழலைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.   ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு அரசியல் சக்திகள் மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றன. தலைவர்களுடைய பேச்சாற்றல், அவர்களுடைய செயல்பாடுகள் என மக்கள் நம்பிக்கைக்கு காரணமான ஏதோ ஒன்று அவர்களை ஈர்த்திருக்கிறது.

ஊழல் குற்றச்சாட்டு, விலைவாசி உயர்வு, மொழிப் பிரச்சனை, இனப்பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களால், மக்கள்  ஆளும் கட்சிகளை புரட்டிப்போட்ட நிகழ்வுகள் தமிழகத்தில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் பதிந்திருக்கிறது. சமூக மாற்றத்தை மையப்படுத்தி உருவாகிய பல இயக்கங்களும் நம் வரலாற்றில் உண்டு. சில கட்சிகள் வந்த வேகத்தியே மறைந்த  நிகழ்வுகளும்  நம் அரசியல் வரலாற்றில் உண்டு. ராஜாஜி தொடங்கிய சுதந்திரா காங்கிரஸ், ம.பொ.சிவஞானத்தின் தமிழரசுக் கட்சி, ஈ.வெ.கி.சம்பத்தின் தமிழ் தேசியக் கட்சி, எஸ்.டி.சோமசுந்தரத்தின் நமது கழகம், நெடுஞ்செழியன், ராஜாராம் உள்ளிட்டவர்கள் துவக்கிய மக்கள் தி.மு.க. போன்ற  எண்ணற்ற கட்சிகள் தமிழகத்தில் மிக எதிர்பார்ப்போடு துவக்கப்பட்டு பின்னர் காணாமல் போய்விட்டன.


மக்கள் மனநிலையை புரிந்து கொண்ட பல  இயக்கங்கள், அரசியல் கட்சிகளாக அவதாரமெடுத்து சாதனை படைத்திருப்பதும்  நம் வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது. அந்த வகையில் தமிழக அரசியல் உருவான வரலாற்றை அலசும் கட்டுரையாக இந்த தொடர் கட்டுரையை உருவாக்க முற்பட்டுள்ளோம்.


மன்னராட்சி காலத்திற்குப் பிறகு ஆங்கிலேயரின் கட்டுகுள் வந்தது, இந்திய அரசியல். அதை மீட்டெடுக்கும் பொருட்டு விடுதலை போராட்ட உணர்வோடு தொடங்கப்பட்ட இயக்கமே காங்கிரஸ் பேரியக்கமாகும். இந்திய விடுதலையை மையப்படுத்தி மக்கள் போராட்டம் நடத்திய ஆரம்ப காலத்தில், இந்தியா முழுவதும் தனித்தனி அமைப்புகளாக போராடினர். அவர்களை ஒரே மையப்புள்ளியில் ஒருங்கிணைக்க  ஒரு வலிமையான அமைப்பு தேவைப்பட்டது. அப்படி 1885 இல் பிரம்மஞான சபையைச் சேர்ந்த A.O Hume போன்றவர்களால்  உருவானதுதான் காங்கிரஸ் பேரியக்கம். ஆனால் அதன் இன்றைய செயல்பாடுகளால் மக்கள் மத்தியில் வரவேற்பை இழந்தது.

தென்னிந்திய நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என அதன் நீட்சி இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதேபோல் இந்திய விடுதலையை எதிர்நோக்கி தொடங்கப்பட்ட  பேராயக்கட்சியான  இந்திய தேசியக் காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகளும் தற்போது பொதுநல நோக்கத்தை மறந்து சுயநல நோக்கத்திற்காக செயல்பட்டு வருவதையும் மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் வருகிறார்கள்.


நீதிக்கட்சி:
காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பாகவும் மாற்றாகவும் நவம்பர் 1916-ல் சென்னையில் உருவானதுதான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation). இச்சங்கம் நீதிக்கட்சி (Justice Party) என்ற பெயரில்தான் பொதுமக்களால் அறியப்பட்டது
இந்தக் கட்சியை ஆரம்பித்தவர்களின் முக்கிய நோக்கம் சமூகத்தில் பின்தங்கியோர் முன்னேற வேண்டும் என்பதுதான்.   அந்த காலகட்டத்தில் மெட்ராஸ் பிரசிடென்சியின் (தமிழகம், ஆந்திரா, கர்நாடகத்தில் சில பகுதிகள், கேரளத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய பகுதி) மக்கள் தொகை 4.75 கோடியாகவும், அதில் சமூக மேல்தட்டு மக்களின் எண்ணிக்கை வெறும் 75 லட்சமாகவும் இருந்தது. ஆனால் 1892 முதல் 1904 வரை மாகாண சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 16 பேரில் 15 பேர் உயர் சாதி வகுப்பினர். அதேபோல் உதவிப் பொறியாளர் தேர்வில் 21 பேரில் 17 பேர் மேட்டுக்குடியினர். அப்பொழுது பதவியில் இருந்த உதவி கலெக்டர்களில் 140 பேரில் 77 பேர் மேல்தட்டைச் சார்ந்தோர். அப்படியே நீதித்துறையில், 1913-ல் ஜில்லா முன்சீப்களின் 128 பேரில்  93 பேர்.  1915-ல் சென்னை மாகாணத்தில் கல்வி கற்றோர் தொகை 8%. ஆனால் உயர் வர்க்கத்தினரில் கல்வி கற்றோர் சதவிகிதம் 75. அதுவரையில் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற 650 பேரில் 452 பேர் மேல்சாதி மக்கள். 1916-ல் மாகாண அரசுப்பணியில் 129 பேரில் 100 பேர் பிராமணர். அதேபோல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மாகாணப் பிரதிநிதிகளில் 16-ல் 15 பேர் இவர்களே.

முதலாம் உலகப்போர் நேரம். அப்பொழுதுதான் காந்தி இனவெறியின் பிடியில் சிக்கியிருந்த தென்னாப்பிரிக்காவிலிருந்து, காலனி ஆதிக்கத்தில் இருந்த  இந்தியாவிற்கு வந்திருந்தார். காங்கிரஸ் தலைவராக இருந்த அன்னி பெசண்ட் 1915-ல் ஹோம் ரூல் இயக்கம் என்றொரு இயக்கத்தைக் கொண்டுவந்தார். கிளர்ச்சியின் மூலம் இந்தியாவுக்கு அதிகப்படியான அதிகாரத்தைப் பெறுதலே அந்த இயக்கத்தின் நோக்கம். ஐரோப்பாவில் போர் நடந்துகொண்டிருப்பதால் இந்தியா மீது அதிக நேரத்தைச் செலுத்த முடியாது என்பதால், பிரிட்டன் ஒருவேளை ஹோம் ரூல் எனப்படும் குறைந்த சுயாட்சியை வழங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பு சில மூத்த காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்தது.

ஆனால் 1916 இல்,  இந்தியாக்கு சுதந்திரம் கிடைத்தால் அதனால் தென்னிந்தியாவில் மேல்சாதியினரின் ஆதிக்கம்தான் இருக்கும் என்று பல தலைவர்கள் நினைத்தனர். ஆங்கிலேயர் ஆட்சி போய் பார்ப்பனர் ஆட்சி வரும் என்று நீதிக்கட்சித் தலைவர்களுக்குத்  தோன்றியது. அதனால் ஹோம் ரூல் இயக்கத்தை எதிர்ப்பது என்றும், பார்ப்பனரல்லாதோர் நலனுக்காக கட்சி ஒன்றை உருவாக்குவது, சில பத்திரிகைகளை உருவாக்குவது என்றும் தீர்மானி த்தனர். அதன் விளைவாக உருவானதே இந்த நீதிக்கட்சி. ஆங்கிலேயர் ஆட்சி தொடரவேண்டும் என்றும் அதன் தொடர்ச்சியில் பல சமூகத்தவரும் கல்வியில் முன்னேறி சகலவிதமான வாய்ப்புகளும் அனைவருக்கும் சமமாக கிடைக்கும்போது சுயாட்சி கிடைத்தால், நாட்டில் சம நீதி இருக்கும் என்றும் நீதிக்கட்சியினர் நினைத்தனர். தமது கொள்கைகளை விளக்க நீதிக்கட்சியினர் ‘Justice’ என்ற ஆங்கிலத் தினசரி, ‘திராவிடன்’ என்ற தமிழ்த் தினசரி, ‘ஆந்திரப் பிரகாசினி’ என்ற தெலுங்குத் தினசரி ஆகியவற்றை தொடங்கினார்கள்.
Justice_Party_1920s
Justice_August_30_1937

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழக மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பு
 
அன்பழகனின் மனு மீது, கர்நாடக அரசு, ஜெயலலிதா 18–ம் தேதிக்குள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Honorable_CM_Jayalalitha_Photos_Stills_Images_19
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல், ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, நீதிபதி குமாரசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதற்கிடையில், அன்பழகனின் மனு மீது, கர்நாடக அரசும், ஜெயலலிதா தரப்பும் வரும் 18–ம் தேதிக்குள் பதில் அளிக்கும் படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, 1991–96–ல் தமிழக முதல் அமைச்சராக இருந்த போது, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருடன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 66 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் உத்தரவு படி, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா விசாரித்து, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்தார். மற்ற 3 பேர்களுக்கும் தலா 4 ஆண்டு சிறையும், தலா ரூ. 10 கோடி அபராதமும் விதித்தார். இதனை தொடர்ந்து 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் அப்பீல் செய்ததுடன், ஜாமீன் மனுக்களையும் தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து 4 பேருக்கும் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கின் அப்பீல் விசாரணையை, பெங்களூர் உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர். குமாரசாமி நடத்தவும், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் படி, பெங்களூரில் நீதிபதி குமாரசாமி தனது விசாரணையை தொடங்கினார். 36—வது நாள் விசாரணையின் போது, அரசு தரப்பு சாட்சிகள் ராஜாராமன், ராதா கிருஷ்ணன், சிவா ஆகியோர் கொடுத்துள்ள சாட்சிகளை, அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், வாசித்து காட்டினார். “இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளவர்கள் இயக்குனர்களாக மற்றும் பங்குதாரர்களாக இருக்கும் “மெடோ ஆக்ரோபாரம்” மற்றும்”ரிவர்வே ஆக்ரோ பாரம்” ஆகிய நிறுவனங்களுக்கு, காஞ்சீபுரம் மாவட்டத்தில் 400 ஏக்கர் நிலமும், நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, மீரா குளம் மற்றும் சேரகுளம் கிராமங்களில் 1,300 ஏக்கர் நிலமும் வாங்கப்பட்டுள்ளது” என்று பவானி சிங் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி,”நிலம் வாங்க ஜெலலிதாவின் பணம் எப்படி பயன்படுத்தப்பட்டது? நிலம் வாங்க ரொக்கமாக பணம் கொடுக்கப்பட்டதா?காசோலையாக கொடுக்கப்பட்டதா?அதற்கான ஆதாரங்களை கொடுங்கள்” என்று கேட்டார்.
crkj
இந்த கேள்விக்கு தாமதமாக, “இதற்கு ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்கிறேன்” என்றார். உடனே நீதிபதி, “நான் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாக பதில் கூறாமல், தாமதமாக பதில் கூறுகிறீர்களே., எந்த குற்றத்துக்கும் சட்டபடியான ஆதாரமும், சாட்சிமும் இருந்தால் மட்டுமே தீர்ப்பளிக்க முடியும்., இதை புரிந்து கொண்டு செயல்படுங்கள்.” என்று நீதிபதி கூறினார். “1971—ம் ஆண்டு தன்னிடம் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சொத்து இருப்பதாக வருமான வரித்துறையிடம் கணக்கு கொடுத்துள்ளார். வழக்கு காலத்தில் அவரது சொத்து என்ன? அதன் பின் அவரது சொத்து என்ன? என்ற விவரத்தை நான் பல முறை கேட்டும், இரு தரப்பினரும் தாக்கல் செய்ய வில்லையே, ஏன்?” என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
“நான் கேட்கும் ஆவணங்களை நீங்கள் கொடுக்க வில்லை., தனி நீதிமன்றத்திலும் இப்படித்தான் வாதிட்டீர்களா? கம்பெனிகளை, இந்த வழக்கில் சேர்த்தற்கான காரணத்தை தெளிவாக கூறுங்கள்” என்று, அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம் நீதிபதி கூறினார்.
இதன் பின் 37—வது நாள் விசாரணையின் போது. “ஜெயலலிதா வங்கி கணக்கில் ரூ 9 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக கூறும் நீங்கள், அதற்கான ஆதாரத்தை கொடுங்கள். கூட்டு சதி எப்போது நடந்தது?இதற்கு அடிப்படை முகாந்திரம் உண்டா ?” என்று அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம், நீதிபதி குமாரசாமி கேட்டார். இதற்கு பதில் அளித்த பவானி சிங், “ நேரடியாக சாட்சியங்கள் இல்லை என்றாலும், ஜெயலலிதா வீட்டில் வேலை செய்த ஜெயராமன் கொடுத்துள்ள சாட்சியத்தில், ஜெயலலிதாவின் வங்கி கணக்கில் அடிக்கடி லட்சக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டதை ஒப்புக்கொண்டு இருக்கிறார். வங்கி அதிகாரிகள் அளித்த சாட்சியத்திலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. “ என்றார்.
“ ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள “கூட்டு சதி” என்ற பிரிவை எப்படி உறுதிப்படுத்த போகிறீர்கள்? இவர்கள் அனைவரும் எந்த இடத்தில் அமர்ந்து இதில் ஈடுபட்டனர்., இந்த வழக்கை பதிவு செய்த பின் ஆதாரத்தை தேடினீர்களா? அல்லது விசாரணை அதிகாரிகள் ஆதாரங்களை கொடுத்தும் நீங்கள், இந்த நீதிமன்றத்தில் கூறாமல் மறைக்கிறீர்களா? பொதுவாக இப்போது சில நாட்களாக உங்கள் செயல்பாட்டில் நீங்கள் மதில் மேல் பூனையாக செயல்படுகிறீர்கள். நீங்கள் சரியாக வாதம் செய்ய வில்லையா?” என்று நீதிபதி குமாரசாமி கேட்டார் .
BHAVANI_SINGH_INTE_1601819e
இதற்கு பதில் அளித்த பவானி சிங்,”இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்த வில்லை.,குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை, நேரடியான சாட்சிகள் இல்லை., அவர்கள் கொடுத்த ஆதாரங்களை வைத்துதான் வாதாடுகிறேன்.” என்றார். இதனால் கோபமடைந்த நீதிபதி குமாரசாமி,” நீங்கள் தானே தனி நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக வாதிட்டீர்கள்? அப்போது எந்த ஆதாரத்தை காட்டினீர்கள்?” என்று கேட்டார்.
இதனைத்தொடர்ந்து பவானி சிங் மவுனம் சாதித்த நிலையில், “ பையனூர் பங்களா மதிப்பு ரூ. 5 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது எப்படி மதிப்பீடு செய்யப்பட்டது?” என்று நீதிபதி கேட்க, அதற்கும் மவுனம் சாதித்தார், பவானி சிங். இதனை தொடர்ந்து, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு சம்பந்தம்,” பையனூர் பங்களாவை 2 என்ஜினீயர்களை வைத்து மதிப்பீடு செய்தோம்”என்றார். “அப்படியென்றால், அந்த இரு என்ஜினீயர்களையும், வரும் 16–ம் தேதி இந்த நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்று குமாரசாமி, உத்தரவு அளித்தார்.
இதனை தொடர்ந்து, சசிகலா தரப்பு வழக்கறிஞர் மணி சங்கர், “கொடைக்கானல், சிறுதாவூர், பையனூரிலுள்ள அசையா சொத்துக்கள் அதிகமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டினார். உடனே, அந்த 3 பங்களா சொத்துக்களை மறுமதிப்பீடு செய்து, அதன் விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று, அரசு வக்கீல் பவானி சிங்குக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதன் பின் பவானி சிங் வாதாடுகையில், ”ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் ரூ. 66.65 கோடிக்கு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டி, சிறப்பு நீதிமன்றத்தில் அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தோம்.,இதில் சில தவறுகளை தனி நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டி, ரூ. 11 கோடியை தள்ளுபடி செய்து விட்டு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த தொகை ரூ. 55 கோடி என்று கணக்கிட்டு, தீர்ப்பளித்துள்ளார். அந்த தீர்ப்பை, இந்த நீதிமன்றமும் உறுதிபடுத்த வேண்டும்” என்று கூறி, தனது வாதத்தை நிறைவு செய்தார். ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தரப்பிலும் சுமார் 300 பக்கங்கள் கொண்ட எழுத்து பூர்வ வாதத்தை, அவர்களது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை தொடர்ந்த சுப்பிரமணிய சுவாமி, தனது வாதத்தை 14 பக்கத்தில் எழுதி , நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது போல அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கும், தனது தரப்பு நிறைவு வாதத்தையும், எழுத்து பூர்வமாக தாக்கல் செய்துள்ளார்.
நீதிபதி குமாரசாமி இதுவரை 41 நாட்கள் இந்த விசாரணையை நடத்தியுள்ளார். இந்த நிலையில், மார்ச். 11–ம் தேதி , “ ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கின் விசாரணை முடிந்து விட்டது. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல், ஒத்தி வைக்கப்படுகிறது” என்று, நீதிபதி குமாரசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதற்கிடையில் பவானி சிங்கை இந்த வழக்கில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி தாக்கலாகி இருந்த மனு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையை, நீதிபதிகள் மதன் லோகூர், ஆதர்ஸ் குமார் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு நடத்தியது. அப்போது அன்பழகனின் வழக்கறிஞர் அந்தி அரிஜூனா வாதிடும் போது, “சிறப்பு நீதிமன்றத்தில் மட்டுமே வாதிட அனுமதி அளித்து கர்நாடக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் பவானி சிங், தானாகவே, அப்பீல் வழக்கு விசாரணையிலும் ஆஜராகி வருகிறார்” என்றார். இதனையடுத்து, கர்நாடக அரசு, ஜெயலலிதா ,சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பினர் வரும் 18—ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை, அதிமுக-வினர் மட்டும் அன்றி, தமிழ்நாட்டிலுள்ள திமுக,. தேமுதிக., பாமக உள்ளிட்ட பல கட்சிகளும் உன்னிப்பாக எதிர்பார்க்கிறார்கள். இந்த அப்பீல் வழக்கின் விசாரணையை மார்ச் 18–ம் தேதிக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தேதி வரம்பை அறிவித்து இருந்தது. அதற்கேற்ற படி, நீதிபதி குமாரசாமியும் தீவிரமாக பணியாற்றி , விசாரணையை முடித்து விட்டார். இந்த அப்பீல் வழக்கில், ஜெயலலிதா ஒரளவு நிம்மதி பெற்று விடுவார் என்றே, பெங்களூர், டெல்லி தகவல்கள் கூறுகின்றன. ஜெயலலிதா முழுமையாக விடுதலை செய்யப்பட்டால், 2016 சட்டமன்ற தேர்தலை விஸ்வரூபம் எடுத்து சந்திப்பார் என்பதால் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் இந்த தீர்ப்பை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
ஜெயலலிதாவின் சொத்து விவரத்தை தனியாக தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு
சொத்துக்குவிப்பு வழக்கில் அப்பீல் விசாரணையை நடத்தி வரும் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் சொத்துக்கணக்கை தனித்தனியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதன் படி தனித்தனியாக சொத்து பட்டியல் தாக்கல் செய்யப்பட்டால், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் ரூ. 66 கோடிக்கு சொத்து சேர்த்தனர் என்ற அரசு தரப்பு வாதம் பொய்யாகி விடும் என்றும், இதனால் 4 பேருக்கும் தண்டனை குறைப்பு அளிக்க வாய்ப்புள்ளது என்றும் நீதித்துறை வட்டாரங்களின் தகவல்கள் கூறுகின்றன.
5 லாரி பட்டாசுகளுக்கு ஆர்டர்
ஜெயலலிதாவுக்கு, சொத்துக்குவிப்பு வழக்கில் முழு நிவாரணம் கிடைத்து விடும் என்று அதிமுக-வினர் உறுதியாக நம்புகிறார்கள். இதனை தொடர்ந்து சிவகாசியில், 5 லாரி பட்டாசுகளுக்கு, சென்னை அதிமுக முக்கிய பிரமுகர்கள் ஆர்டர் அளித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையில், கார்டனுக்கு முதல் அமைச்சர் பன்னீர் செல்வத்தை அழைத்த ஜெயலலிதா, கடுமையாக கண்டித்து அனுப்பியதாக தெரிய வருகிறது. இது, ஓ.பி.எஸ். பதவிக்கே ஆபத்தாக முடியும் என்றும், அடுத்த முதல்வராக அமைச்சர் வைத்திலிங்கம் பதவி ஏற்கலாம் என்றும், சில பெயர் சொல்ல விரும்பாத அதிமுக-வினர் கருத்து தெரிவித்துள்ளனர்.