வெள்ளி, 5 ஜூன், 2015

முதல்வர் எந்த விதத்தில் குறைவு?


அரசு விளம்பரங்களில் தலைவர்கள் படம் இடம்பெறலாமா, கூடாதா என்பது ஒரு ஆரோக்கியமான விவாதம்தான். இந்தியாவைப் பொறுத்த அளவில், அது மத்திய அரசோ மாநில அரசுகளோ யார் தரும் விளம்பரங்கள் என்றாலும், ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களின் படங்களும் அவர்களின் சாதனைகளும் ஆதிக்கம் செலுத்துவது சகஜமாகிவிட்டது. இந்நிலையில், அரசு விளம்பரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் சமீபத்திய உத்தரவு சர்ச்சைகளுக்கு வழிவகுக்கிறது.
அரசு வெளியிடும் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரைத் தவிர, வேறு எவருடைய புகைப்படங்களையும் வெளியிடக் கூடாது என்று தீர்ப்பில் சொன்னது உச்ச நீதிமன்றம். மறைந்த தலைவர்களில் காந்தி, நேரு போன்றோரின் படங்களைப் பயன்படுத்தத் தடையில்லை என்று குறிப்பிட்ட அது, மாநிலங்களில் ஆட்சி செய்யும் முதல்வர்கள், ஆளுநர்கள் ஆகியோரின் படங்களைக்கூட வெளியிடக் கூடாது என்றும் சொன்னது. மத்திய, மாநில அரசு விளம்பரங்களில் பிரதமர், முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோரின் புகைப் படங்களை வெளியிடுவது தனிநபர் வழிபாட்டை ஊக்குவிப்பதாக இருக்கிறது, மக்களின் வரிப்பணத்தில் இப்படி சுய விளம்பரம் தேடும் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுநல வழக்கு களுக்கான மையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இதுகுறித்து விசாரிக்க 3 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நியமித்தது. அதன் விரிவான விசாரணைக்குப் பிறகு அளித்த அறிக்கையின்பேரிலேயே இந்த வழிகாட்டு நெறிகளை உச்ச நீதிமன்றம் உத்தரவாகப் பிறப்பித்திருக்கிறது. மேலும், இந்த உத்தரவு முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்று கண்காணிக்க 3 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு 3 முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.
முதலாவது, உச்ச நீதிமன்றம் அனுமதிக்கும் மூவர் - குடியரசுத் தலைவர், பிரதமர், தலைமை நீதிபதி - வரையறை ஏற்புடையதாக இல்லை. ஒருவேளை, உயிரோடு இருக்கும் எந்தத் தலைவரின் படங் களையும் பயன்படுத்தக் கூடாது என்று தீர்ப்பளித்திருந்தால் அது வேறு; இந்த மூவர் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்? மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமரின் படம் விளம்பரத்தில் இடம்பெறலாம் என்றால், முதல்வர்களின் படங்களும் இடம்பெறலாம் தானே? முதல்வர்களின் படங்களுக்கே இடம் இல்லாத இடத்தில், நீதிபதிகளின் படங்களுக்கு என்ன வேலை? இரண்டாவது, இந்தத் தீர்ப்பு மைய அதிகாரத்தை நோக்கித் தள்ளுகிறது. அதாவது, மாநில அரசுகளின் உரிமையில் தலையிடுகிறது. இது சரியா? மூன்றாவது, இத்தகைய விஷயங்களில் நீதிமன்றங்களின் தலையீடு. இந்த வழக்கு விவாதத்துக்கு வந்தபோதே, “மத்திய, மாநில அரசுகள் விளம்பரங் களைத் தருவது, திட்டங்களை மக்களிடம் அறிமுகப்படுத்தவும் அவற்றின் பலன்களைத் தெரிந்துகொள்ளச் செய்யவும்தான்; இது போன்ற கொள்கை விஷயங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது” என்று அரசுத் தரப்பில் ஆஜரான முகுல் ரோத்தகி வாதிட்டார். நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு இதை ஏற்கவில்லை என்றாலும், இந்த வாதம் முக்கியமானதாகத் தோன்றுகிறது.
இதுபோன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் முடிவெடுப்பதைவிடவும் அரசே ஒரு ஒழுங்குமுறையை உருவாக்கிக்கொள்ள வழிவகுப்பதே சிறப்பானதாக இருக்கும் என்று தோன்றுகிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக