ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அடுத்த மாதம், 20ம் தேதி, தீர்ப்பு வழங்கப்படும் என, நீதிபதி அறிவித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, ஆளும் கட்சியினரும், 'திக்... திக்...' மனதுடன், தீர்ப்பு நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அ.தி.மு.க., பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா, 1991ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்ததாக, அடுத்து ஆட்சிக்கு வந்த, தி.மு.க., சார்பில், வழக்கு தொடரப்பட்டது.இவ்வழக்கு, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பல்வேறு இழுபறியால், 18 ஆண்டுகளுக்கு பின், ஒருவழியாக, வழக்கு விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அடுத்த மாதம், 20ம் தேதி, தீர்ப்பு வழங்கப்படும் என, நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அறிவித்துள்ளார்.தீர்ப்பு, முதல்வருக்கு சாதகமாக இருக்குமா அல்லது பாதகமாக இருக்குமா என்ற விவாதம், தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இத்தீர்ப்பை அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, பொதுமக்களும், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
2001ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, கோர்ட் தீர்ப்பைத் தொடர்ந்து தன் பதவியை ராஜினாமா செய்தபோது. 2001 செப்டம்பர் மாதம், 21ம் தேதியில் இருந்து, 2002 மார்ச் 1ம் தேதி வரை, தற்போதைய நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், முதல்வராக இருந்தார்.அதன்பின், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். அதே போல், சொத்து குவிப்பு மீதான வழக்கின் தீர்ப்பும், செப்டம்பர் மாதம் வருகிறது. தீர்ப்பை வைத்து, அரசியல் செய்யலாம் என, எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன.முதல்வர் மீதான வழக்கின் தீர்ப்பு, அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என, அனைத்து தரப்பினரும், தீர்ப்பு நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
லோக்சபா தேர்தலில், அசைக்க முடியாத வெற்றியை பெற்றவர், அடுத்த சட்டசபை தேர்தலையும், துணிச்சலுடன் எதிர் கொள்வார்.இது, எதிர்க்கட்சிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும். எனவே, முதல்வருக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டும் என, அவரது கட்சியினர் விரும்புகின்றனர். தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை யூகிக்க முடியாததால், படபடப்புடன் நாட்கள் நகர்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக