டில்லியில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மாபெரும் வெற்றியை பெற்றுள்ள ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்களை சந்தித்து பேசினார்.
டில்லியில் தேசிய கட்சிகளான பா.ஜ.,(4) மற்றும் காங்கிரஸ் ( 0) குறைந்த இடங்களை பெற்று பெரும் சரிவை சந்தித்துள்ளது. இந்த தோல்வியால் பா.ஜ., கவனத்துடன் இருக்க வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் எண்ணத்தை பா.ஜ., புரிந்து கொள்வதில் தோல்வி அடைந்து விட்டது என டில்லி பா.ஜ., தலைவர் உபாத்யாயா கூறியுள்ளார்.
இந்த தேர்லை பொறுத்தவரை ஆம் ஆத்மிக்கு பெரும் வெற்றி கிட்டியுள்ளது. இது அனைத்து அரசியல் கட்சியினரையும் அதிர வைத்துள்ளது.
ஊழல் - வி.ஐ.பி., கலாச்சாரம் ஒழிப்போம் : தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த போது அரவிந்த்கெஜ்ரிவால் தொண்டர்கள் மத்தியில் பேசுகையில்: என்னை அச்சுறுத்தும் அளவிற்கு மக்கள் வெற்றியை தந்துள்ளனர். வெற்றி தந்த மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த பெரும் வெற்றியால் ' இறுமாப்புடன் நாங்கள் இருக்க மாட்டோம் '- கட்சி தொண்டர்கள் யாரும் அகந்தை கொள்ள கூடாது. மக்கள் எங்களிடம் பெரிய பொறுப்பை தந்துள்ளனர் . எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இது ஆம்ஆத்மியின் வெற்றி .இவர்கள் எதிர்பார்ப்பை நாங்கள் நிறைவேற்றுவோம். ஏழை, பணக்காரன் என அனைவரும் சமமாக பாவிக்கப்படுவர். ஊழல் - வி.ஐ.பி., கலாச்சாரம் ஒழிப்போம். பிரமாண்ட வெற்றியை தந்த மக்களுக்கு சல்யூட் அடிக்கிறேன். பெரும் மாற்றத்திற்கான நேரம் வந்துள்ளது. உண்மையான சவால்கள் துவங்கியிருக்கிறது. டில்லியின் வளர்ச்சிக்கு அனைவருடனும் இணைந்து செயல்படுவேன். தனியாக எதுவும் செய்ய மாட்டேன். பாரத் மாதக்கி ஜே., என பேச்சை முடித்தார். தொண்டர்கள் கெஜ்ரிவால், கெஜ்ரிவால் என கோஷம் எழுப்பினர்.