குடியரசுத் தலைவர் உரைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பினை அளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெற்றுள்ள அம்சங்களுக்கு வரவேற்பு தெரிவித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
பொதுத் தேர்தலுக்குப் பிறகு கூடிய நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆற்றிய விரிவான மற்றும் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய உரையினை வரவேற்கிறேன். புதிய அரசின் கொள்கை ரீதியான முன்னுரிமைகளை, மிகவும் திறம்படவும், தெளிவாகவும் குடியரசுத் தலைவர் தனது உரையில் கோடிட்டுக் காட்டியுள்ளார். விவாதமும், கருத்து வேறுபாடும் கொண்ட விவகாரங்களை குடியரசுத் தலைவர் உரை தெளிவுபடுத்தியிருக்கிறது. இது அடுத்துவரும் 5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு மிகவும் நன்மை அளிக்கக்கூடியதாகும்.
எதிர்பார்ப்புகளுக்கு அங்கீகாரம்: மத்திய அரசுக்கு வாக்களித்து உறுதியான தேர்தல் தீர்ப்பினை வழங்கிய வாக்காளர்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக அங்கீகரிப்பதாக குடியரசுத் தலைவரின் உரை அமைந்துள்ளது. அனைத்து முக்கியத் துறைகளையும், நாடு எதிர்நோக்கியுள்ள முக்கியப் பிரச்னைகளையும் குடியரசுத் தலைவரின் உரை உள்ளடக்கியுள்ளது. ஏழை மக்களுக்கு பெருமளவிலான முன்னேற்றங்கள் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
முறையான கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டினை அகற்றுதல் உள்ளிட்ட கல்வி தொடர்பான பல ஆக்கப்பூர்வமான யோசனைகள் இடம்பெற்றுள்ளன. ஒட்டுமொத்த கல்வியில், விளையாட்டு மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுத் திறன் அறியும் குழு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே உறுதி அளிக்கப்பட்ட புதிய சுகாதார கொள்கையினை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த ஆண்டு தினமான 2019-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பிட வசதி அளிக்க வகை செய்யும் ஸ்வாச் (நஜ்ஹஸ்ரீட்ஸ்ரீட்) பாரத் மிஷன் மிகவும் உயர்வான திட்டம். தமிழகத்தினை 2015-ஆம் ஆண்டுக்குள் திறந்தவெளி கழிப்பிடமற்றதாக மாற்றுவதற்கு மிகுந்த ஆவலுடன் இலக்கினை நிர்ணயித்துள்ளோம். சவால் மிகுந்த இந்த இலக்கினை எட்டுவதற்கு எங்களது முயற்சி இருமடங்காக அதிகரிக்கப்படும். இதற்கு மத்திய அரசின் ஆதரவினை எதிர்பார்க்கிறோம்.
ஊரக கட்டமைப்புக்கு முன்னுரிமை அளித்திருப்பது மிகவும் பொருத்தமானது. ஊரக வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்கான நிதியினை சிறப்பான முறையில் பயன்படுத்துவதை இது உறுதிப்படுத்தும். விவசாயம் மற்றும் நீர் பாதுகாப்பு ஆகியவற்றில் அரசு மற்றும் தனியார் முதலீடுகளை அதிகப்படுத்துவதற்கு சரியான நேரத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சரக்கு-சேவை வரிவிதிப்பு: தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்பட சமுதாயத்தின் சாதகமற்ற பிரிவினரின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் உத்வேகம் குடியரசுத் தலைவரின் உரையில் இடம்பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என மீண்டும் உறுதி செய்துள்ளது வரவேற்கத்தக்கது.
குறிப்பாக, மத்திய-மாநில கூட்டமைப்புக்கான ஒத்துழைப்பில் உத்வேகம் கொண்டு வரப்படுவதற்கான அறிவிப்பு குடியரசுத் தலைவரின் உரையில் இடம்பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. கடந்த 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக நீர்த்துப் போகச் செய்த கூட்டமைப்புக்கான உத்வேகம், இதன் மூலம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.
மத்திய அரசு குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு ஆதரவு கொடுப்பதை எதிர்க்கவில்லை. மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு நிதி ஊக்கத் தொகை வழங்கும் பிரச்னையில், குறிப்பாக பகுதி வாரியாக வரிவிலக்கு அளிப்பதிலும், அண்டை மாநிலங்களுடன் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், எச்சரிக்கையுடன் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு, மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்த பின் செயல்படுத்தப்படும் என குடியரசுத் தலைவர் தனது உரையில் கோடிட்டுக் காட்டியிருப்பது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.இந்தப் பிரச்னையில் தமிழகத்தின் நிலை குறித்தும், சேவை வரி விதிப்பை செயல்படுத்துவதற்கு முன் முழுமையாக கலந்து ஆலோசிக்க வேண்டும் என்பது குறித்தும் ஏற்கெனவே சுட்டிக் காட்டியுள்ளேன்.
புதிய நகரங்கள்-சுற்றுலா மையங்கள்:
உள்கட்டமைப்பு, தொழில் மேம்பாடு ஆகியவற்றின் வளர்ச்சி குறித்து சரியான பார்வை கொண்டுள்ளதும், இது தமிழகத்தின் வளர்ச்சிக்கு சந்தேகத்துக்கு இடமின்றி உதவும் வகையில் வழங்கப்பட்ட சாதகமான தகவலாகும். மேலும், 100 புதிய நகரங்களையும், 50 சுற்றுலா மையங்களையும் உருவாக்குவது தொடர்பான அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.
மாநில காவல்துறையை நவீனப்படுத்துவற்கு மத்திய அரசு உதவும் என்ற அறிவிப்பும், அதன்படி தமிழகத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன். இந்திய கடலோர எல்லைகளைப் பாதுகாக்க தேசிய கடலோர ஆணையம் உருவாக்கப்படும் என்று குடியரசு தலைவர் உரையில் இடம்பெற்றிருப்பது வரவேற்கக்கூடியது. இந்த நடவடிக்கையில் மாநில அரசு முழுமையாக பங்கேற்கும்.